சூரிய மண்டல விந்தைகள் - (புதன்)

சூரிய மண்டல விந்தைகள் - (புதன்)


சூரியனிலிருந்து தொடங்கினால் முதலில் இருப்பது புதன் கிரகமே. இதற்கு ஆங்கிலத்தில் மெர்குரி என்று பெயர்.

இந்த புதன் கிரகத்திற்கு மனிதன் சென்றது கிடையாது. ஆனால் மனிதன் உருவாக்கிய ஆளில்லா விண்கலங்கள் புதன் கிரகத்தின் அருகில் சென்று பல தகவல்களைச் சேகரித்து நமக்கு அளித்துள்ளன.

இப்போது இந்த புதன் கிரகத்தில் நடைபெறும் சில விந்தையான நிகழ்வுகளை பற்றி பார்ப்போம்.

இந்த புதன் கிரகத்தில் நாம் ஒரு குறிப்பிட்ட ஓரிடத்தில் இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். நீண்ட இரவு விடியப் போகிறது. புதன் கிரகத்தில் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக விண்கலத்துக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். சற்று நேரத்தில் கிழக்கு திசையின் அடிவானில் சூரியன் தலைகாட்டுகிறது. சூரியன் முழுமையாக வெளியே வருவதை பார்க்க சில மணி நேரம் ஆகிறது.

சூரியன் இப்போது முழுவதுமாக வெளியே வந்துவிட்டது. அப்பாடியோவ்!!! எவ்வளவு பெரிய சூரியன். சினிமா தியேட்டரில் 70mm திரைக்கு பக்கத்தில் நின்று பார்ப்பது போல மிகவும் பெரிதாக சூரியன் புதன் கிரகத்தின் வானில் காட்சியளிக்கிறது. பூமியில் இருந்து பார்த்து பழக்கப்பட்ட சூரியனை விட பல மடங்கு பெரிதாக இருக்கிறது.

புதன் வானில் சூரியன் மெதுவாகவே நகர்கிறது. கிழக்கில் உதித்த சூரியன் மறுபடி வானத்தை நோக்கி கீழே இறங்குகிறது. கிழக்கு திசையிலேயே அஸ்தமனம் ஆகிறது கிழக்கே உதித்த சூரியன் மீண்டும் கிழக்கிலேயே அஸ்தமித்து மறைவது நமக்கு வியப்பை அளிக்கலாம். ஆனால் உண்மையில் புதன் கிரகத்தில் அவ்வாறு தான் நடைபெறுகிறது.

இவ்வாறு கிழக்கில் அஸ்தமித்த சூரியன் சற்று நேரத்தில் மீண்டும் கிழக்கு திசையிலேயே உதிக்க தொடங்குகிறது. இவ்வாறு வேடிக்கையான வகையில் சூரியன் இரண்டாவது தடவையாக மீண்டும் உதிக்கிறது.


ஆனால் புதன் கிரகத்தில் குறிப்பிட்ட சமயத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இரண்டு சூரிய உதயம் ஏற்படும் அதேபோல் இரண்டு அஸ்தமனங்கள் நிகழும்.

புதனை பொறுத்தவரையில் மற்ற எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு இதற்கு உண்டு. சூரிய மண்டலத்திலேயே மிக வேகமாகச் செல்கிற கிரகம் புதன் தான் அது சூரியனை சுற்றுகையில் தன் சுற்றுப் பாதையில் ராக்கெட்டை மிஞ்சும் வேகத்தில் செல்கிறது புதனின் சுற்றுப்பாதை சூரியனுக்கு மிக அருகில் அமைந்திருக்கும் போது அதன் வேகம் மணிக்கு 2,05,200 கிலோமீட்டர்.

புதன் சூரியனுக்கு மிக அருகில் அமைந்திருப்பதே புதன் இவ்வாறு தலைதெறிக்க ஓடுவதற்கு காரணம்

புதனின் மற்றொரு விந்தையான நிகழ்வு அதனுடைய நீண்ட இரவு மற்றும் பகல் ஆகும்!.
            பூமி தனது அச்சில் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் ஆகிறது. இதையே நாம் ஒரு நாள் என்கிறோம். இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாதங்களில் பகல் என்பது சுமார் 12 மணி நேரமாகவும் இரவு என்பது சுமார் 12 மணி நேரமாகவும் உள்ளது.

ஆனால் முதன் தனது அச்சில் ஒருமுறை சுழல 192 மணி நேரம் ( 8 நாள்) ஆவதாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் 96 மணி நேரம் (4 நாள் தொடர்ந்து) பகலாக இருக்கும். 96 மணி நேரம் தொடர்ந்து இரவாக இருக்கும். புதன் கிரகத்தில் இது போன்ற நிலைமைதான் உள்ளது.

சூரியனை சுற்றுகையில் அசுரவேகத்தில் செல்லும் புதன் தனது அச்சில் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் போது மிகவும் மெதுவாக சுழல்கிறது.

புதன் கிரகத்தில் இவ்வாறு பகல் என்பது பல வாரம் நீடிக்கும். இதன் விளைவாக புதனை சூரியன் சுட்டெரிக்கிறது.

பூமியின் நாம் வசிக்கும் பகுதியில் அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் தாங்காமல் தவிக்கிறோம். முதலில் பல வார காலம் பகலாக இருக்கிற பகுதியில் எப்போதுமே அக்னி நட்சத்திரம் தான்!!!. புதன் கிரகத்தில் பொதுவியல் வெப்பம் 350 டிகிரி செல்சியஸ். இது பூமியில் அக்னி நட்சத்திரத்தின் போது வானில் ஒரே சமயத்தில் 10 சூரியன்கள் பிரகாசத்தால் இருக்கக்கூடிய வெயிலுக்கு சமமாக இருக்கக்கூடும். இதிலிருந்து புதனில் வெயிலின் கடுமை எந்த அளவிற்கு இருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம். வெள்ளீயம், காரியம் ஆகிய உலோகத் துண்டுகளை புதனில் தரையில் போட்டாலே போதும், உடனே உருகிவிடும்.

புதனில் பகலாக உள்ள பகுதியில் அடிக்கும் வெயிலிலிருந்து தப்ப இரவாக இருக்கிற பகுதிக்கு போனால் சுகமாக இருக்குமா என்றால்? இல்லை, கண்டிப்பாக கிடையாது!!!. அப்பகுதியில் குளிர் சொல்ல முடியாத அளவிற்கு இருக்கும். மைனஸ் 170 டிகிரி செல்சியஸ்! இத்துடன் ஒப்பிட்டால் பூமியில் கடும் குளிர் வீசும் தென்துருவம் ஆன அண்டார்க்டிகாவின் அதிகபட்ச குளிர் ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடலாம்.

புதன் கிரகத்தில் இவ்வாறு கடும் குளிர், கடும் வெப்பம். அதற்கும் மேல் காற்று மண்டலம் என்பது அங்கு அறவே கிடையாது. கடல்களும் இல்லை. சொல்லப்போனால் தண்ணீர் என்பதே கிடையாது. ஆகவே தான் புதனில் எந்த உயிரினமும் இல்லை. புல், பூண்டு கூட இல்லை. அந்த கிரகம் மொத்தமும் வெறும் பொட்டல் காடுதான்.

புதனில் எங்கு பார்த்தாலும் வட்ட வடிவப் பள்ளங்கள், நிலத்தில் விரிசல்கள் ஆகியவைதான் காணப்படுகின்றன.

சூரிய மண்டலம் உருவானதற்கு சில காலத்துக்குப் பிறகு விண்வெளியில் பெரிய பெரிய பாறைகள் உலாவிக் கொண்டிருந்தன. இவை புதன், வெள்ளி, பூமி, சந்திரன் முதலியவற்றை தாக்கின. ஒரு பாறையல்ல; பல நூறு பாறைகள்!!! கிரகங்களின் மீது விழுந்தன. இதனால் விழுந்த இடங்களில் பெரிய பெரிய பள்ளங்கள் உருவாகின. பாறைகளின் சிதறல்கள் நாலாபுறங்களிலும் கிடக்கின்றன. புதன் கிரகத்தின் மேற்பரப்பில் இப்படியான பள்ளங்கள் நிறைய காணப்படுகின்றன.

இவ்வாறு புதன் சூரியனால் சுட்டெரிக்கப்பட்டும், விண்கற்களால் தாக்கப்படும் காற்று மண்டலம் மற்றும் தண்ணீர் இல்லாத வெறும் வறண்ட நிலப்பரப்பாக மட்டுமே காட்சியளிக்கிறது.

இப்போது இந்த புதன் கிரகத்தின் சுற்றுப்பாதை பற்றியும், புதன் கடப்பு எனும் நிகழ்வை பற்றியும் காண்போம்.

புதன் கிரகத்தின் சுற்றுப் பாதை சாய்வாக இருப்பதால் பெரும்பாலான சமயங்களில் அது சூரியனுக்கும் பூமிக்கும் நேர் குறுக்கே வருவதில்லை. புதன் கிரகம் வானில் ஒன்று சூரியனுக்கு மேற்புறத்தில் இருக்கும். அல்லது கீழ்ப்புறத்தில் இருக்கும். அபூர்வமாகத்தான் நேர் குறுக்கே வரும். ஆனால் அப்போது புதன் கிரகம் சூரியன் ஒளித் தட்டை மறைக்காது. அதாவது, சூரிய கிரகணத்தின் போது சூரியனை மறைக்கப்படுவது போன்று நிகழாது.


 புதன் கிரகம் பூமியிலிருந்து மிகத் தொலைவில் இருப்பதால் அது சூரிய ஒளித் தட்டில் கரும்புள்ளியாக தான் தெரியும். ஆகவே, இதை கிரகணம் என்று சொல்வதில்லை. புதன் கடப்பு என்று குறிப்பிடுகின்றனர். 2006-ஆம் ஆண்டில் முதன் கடப்பு நிகழ்ந்தது.

பின்னர் இதே போன்ற புதன் கடப்பு 2016-ம் ஆண்டு மே 9-ஆம் தேதி நிகழ்ந்தது. அதன் பின்னர் 2019-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி நிகழும்.

Comments

Popular Post's

கனாக் கண்டேன் 4

கனாக் கண்டேன்

இரவில் ஒரு பயணம்