நிலவில் உள்ள லாவா குழாய்களும் மனித வாழ்க்கையும்!!!

நிலவில் உள்ள லாவா குழாய்களும் மனித வாழ்க்கையும்!!!


நிலவுக்கும் நமக்குமான பந்தம் மிகச் சிறு வயதிலேயே நமக்குள் விதைக்கப்பட்டுவிட்டது. சிறுவயதில் நிலவைக் காட்டி அம்மா சோறு
ஊட்டியதும், அந்த நிலவில் பாட்டி அமர்ந்து வடை சுட்டுக்கொண்டிருக்கிறாள் என்று அம்மா கூறிய கதையும் நம்மால் மறக்க முடியாது.
இன்று அதே நிலவில் சென்று வாழ்வதற்கான ஆயத்தங்களை உலக விஞ்ஞானிகள் செய்து வருகிறார்கள். தூரத்தில் இருந்து பார்க்கும் போது மிக அழகாகத் தெரியும் நிலா நிஜத்தில் அப்படி இல்லை. மனித வாழ்க்கைக்கு ஏதுவான
அடிப்படை வசதிகள் இல்லாத ஆபத்தான தட்ப வெப்ப சூழல்களைக் கொண்ட ஒரு வெற்று நிலப்பரப்பாகத்தான் இருக்கிறது நிலவு.

மனிதன் நிலவில் சென்று வாழ வேண்டுமானால், முதலில் அங்கு செல்லும் விண்வெளி ஆய்வாளர்கள் தாங்கள் பயணம் செய்த விண்வெளி கருவியை விட்டு வெளியேறி, நிலவின் நிலப்பரப்பில் தங்கி வாழ்வதற்கான சூழலை, அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதன் பிறகு தான் அங்கு குடியிருப்புகளை நிறுவும் முயற்சிகளை மேற்கொள்ள முடியும். அந்த வகையில், சமீபத்தில் நிலவில் இருந்து தகவல்களை சேகரித்து அனுப்பிய ஜப்பான் நாட்டு 'செலீன்' விண்கலம் (Sclcne spacecraft) நிலவில் அதிக அளவில் இருக்கக்கூடிய லாவா குழாய்கள் (Lava Tubes) எனப்படும் பகுதிகள் மனித வாழ்க்கைக்கு ஏதுவான அல்லது பாதுகாப்பான இடங்களாக இருக்கக்கூடும் என்ற தகவலை தெரிவித்துள்ளது.

இந்த லாவா குழாய்கள் நிலவில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய எரிமலைகளால் உருவாக்கப்படும் குழாய் போன்ற அமைப்புகள் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற லாவா குழாய்கள் பூமியிலும் எரிமலைகளால் உருவாக்கப்படுகின்றன.

அது சரி, லாவா குழாய்கள் எப்படி மனித வாழ்க்கைக்கு பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?

லாவா குழாய்கள் வழியாக ஓடக்கூடிய லாவா குழம்பு முழுவதும் வடிந்துவிட்ட பின்னர், அந்த குழாய்கள் மனிதர்கள் வாழக்கூடிய அளவுக்கு உறுதியான ஒரு அமைப்பாக மாறுகிறது. மேலும், ஒரு அமெரிக்க நகரம் முழுவதையும் குடியமர்த்தும் அளவுக்கு மிகப் பெரிய
ஒரு அமைப்பாக நிலவின் லாவா குழாய்கள் இருக்கின்றன என்கிறார் இந்த ஆய்வினை மேற்கொண்ட விண்வெளி ஆய்வு மையமான
'ஜாக்சா 'வின் (Japan Aerospace Exploration Agency, JAXA) ஆய்வாளர் ஜூனிச்சி ஹருயாமா.
மேலும், இந்த லாவா தொடர்பான மேலதிக தகவல்களை அளிக்கக்கூடிய பாறை மாதிரிகள், வெப்ப ஓட்ட தகவல்கள் மற்றும் நிலவின் பூகம்பங்கள் தொடர்பான தகவல்கள்
அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்கிறார் ஹருயாமா.

மனிதர்களின் நிலவுக் குடியிருப்பாக எதிர்காலத்தில் மாறக்கூடிய லாவா குழாய்களை முழுமையாகப் புரிந்துகொள்ள,
தற்போது நிலவைச் சுற்றி வட்டமடித்து தகவல்களைச் சேகரித்து வரும் ஜப்பானின் செலீன் விண்கலம் அனுப்பிய தகவல்கள் மட்டுமல்லாமல் கடந்த 2011-ம் ஆண்டில் நாசாவின் கிராவிட்டி ரெக்கவரி அண்டு இன்டீரியர் லேபரட்டரி அல்லது கிரெய்ல் திட்டத்தில் (Gravity Recovery and Interior Laboratory (GRAIL) mission) சேகரிக்கப்பட்ட தகவல்களையும் ஆய்வு செய்துள்ளது ஜப்பானிய ஆய்வுக்குழு.

முக்கிய இந்நிலவில் உள்ள 'மேரியஸ் மலைகள்' (Marius Hills) எனப்படும் எரிமலைக்குன்று மலைத் தொடர்களுக்கு அருகில் உள்ள லாவா குழாய்கள் தொடர்பான ஆதாரங்கள் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன
மேலும், நிலவுக்கு மனிதர்களை அனுப்பி அங்கு குடியிருப்புகளை அமைக்க நிலவிலுள்ள மேலும் பல லாவா குழாய்களைக் கண்டறிவதும், அவை எவ்வளவு ஆழமாக மற்றும் உயரமானவையாக இருக்கின்றன என்பதை உறுதி செய்வதும் அவசியம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆக மொத்தத்தில், மனிதர்கள் நிலவில் சென்று வாழ்வது உறுதியாகும் பட்சத்தில் நமது வாழ்விடம் லாவா குழாய்களாக இருந்தால் ஆச்சர்யப்படத் தேவையில்லை!!!


                            [The content in the above Article is collected from News Articles]

Comments

Popular Post's

கனாக் கண்டேன் 4

கனாக் கண்டேன்

இரவில் ஒரு பயணம்