வீழாது தமிழ்!!!

                                    வீழாது தமிழ்!!!

 முன்னுரை:      

     
       "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே 
  முன் தோன்றிய மூத்தக்குடி மக்கள் தமிழர்கள்"

அவ்வாறு தோன்றிய மூத்தக்குடி மக்கள் பேசிய மொழி " தமிழ்". இந்த தமிழ் மொழியானது மற்ற மொழிகளைப் போல் வெறும் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் உதவும் மொழியாக இல்லாமல் கலாச்சாரம், பண்பாடு ,நாகரிகம், என அனைத்தும் கொண்ட மொழியாக உள்ளது. ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும் பிரெஞ்சு தூதின் மொழி என்றும் இத்தாலியன் காதலின் மொழி என்றும் அறியப்படும் பொழுது நம் தமிழ் மொழியானது தாய்மொழி என நம்மால் கருதப்படுகிறது. மற்ற மொழிகளில் எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழ் மொழியில் இலக்கண இலக்கிய நூல்கள் தோன்றிவிட்டன. இத்தகு சிறப்பு வாய்ந்த நம் தமிழ் மொழியின் ஒரு சீரியப் பண்பைப் பற்றி பொருளுரையில் காண்போம்.


பொருளுரை:

   
                 நம் தமிழ் மொழியானது உலகின் மிகப் பழமையான வாழும் மொழிகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதென்ன "வாழும் மொழி" 
வாழும் மொழி என்பது இன்றளவும் மக்களால் பேசப்படும் மொழியாக இருக்க வேண்டும். மேலும் அம்மொழி பயிற்றுவிப்பு மொழியாக இருக்க வேண்டும். அரசாங்கத்தால் பயன்படுத்தக்கூடிய மொழியாக இருக்க வேண்டும். நம் தமிழ் மொழியானது இவ்வனைத்துப் பண்புகளையும் பெற்றிருக்கின்றது. ஏனெனில் நம் இந்தியாவைப் பொருத்த வரையில் இரண்டு பெரிய மொழிகள் ஒன்று சமஸ்கிருதம் மற்றொன்று தமிழ். இவ்விரண்டு மொழிகளில் எது முதலில் தோன்றியது என்ற கருத்து இருவருக்கும் உள்ளது நாம் நம் தமிழ் மொழி தான் பழமையானது என்பதற்கு சான்றுகள் கொண்டு வந்தால் அதேப் போல் அவர்களும் அவர்களுடைய சமஸ்கிருதம் பழமையானது என்பதற்கு சான்றுகள் கொண்டு வருகின்றனர். இந்த விவாதம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் இன்று அந்த சமஸ்கிருத மொழி பேச்சு வழக்கில் இல்லை மேலும்  வாழும் மொழியாகவும் இல்லை. அது வெறும் ஏடுகளிலும் மந்திர உபதேசத்தில் மட்டுமே உள்ளது. அதே போல் வேறு பல பழமையான மொழிகளும் வழக்கொழிந்து போய் விட்டன. ஆனால் நம் தமிழ் மொழி இன்றும் கம்பீரமாக நிமிர்ந்து நின்று கொண்டு உள்ளது. அதற்கு காரணம் தமிழ் மொழி இன்றும் இளமையான மொழியாக இருப்பது தான்!!!


தமிழின் இளமைப் பண்பு:

           
            தமிழ் மொழியானது செம்மொழி ஆகும் என செம்மொழி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த செம்மொழிக்கு உரித்தான பண்புகளில் ஒன்று  இளமைப் பண்பு. இந்த பண்பு மிகவும் அத்தியாவசியமான பண்பாகும் ஏனெனில் இந்தப் பண்பு இல்லாதனால்  பல பழமையான மொழிகள் வழக்கொழிந்து போய்விட்டன. இதில் இரண்டு விதமான கூறுகள் உள்ளன.

1)வழக்கொழிந்த மொழி
2)இறந்த மொழி


1) வழக்கொழிந்த மொழி

             
               வழக்கொழிந்த மொழி என்பது பேசுபவர் எவரும் இல்லாத மொழியாகும். தகுந்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றால் இந்த நூற்றாண்டின் இறுதியில்,  உலகில் தற்போது பேசப்பட்டு வரும் 6000 க்கும் மேற்பட்ட மொழிகளில் பாதிக்கும் மேல் முற்றிலும் வழக்கொழிந்து போய்விடும் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கூறியுள்ளது. இவ்வாறு மொழிகள் அழிவதனால் பண்பாட்டு வளங்கள் அழிவதுடன் அம்மொழியில் பொதிந்திருக்க கூடிய மூதாதயர்களின் அறிவையும் மனித வரலாற்றின் சில பகுதிகளையும் மனிதர்கள் இழக்க வேண்டி நேரிடும். உலக மொழிகளில் 90% மொழிகள் 2050ஆம் ஆண்டளவில் அழிந்துவிடும் என ஒரு அறிக்கை கூறுகிறது. அதற்கு காரணம் அந்த மொழிகள் தங்களை காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியாதது ஆகும். அதுமட்டுமின்றி உலகில் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தும் மொழியாகிய ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை அம்மொழிகளால் தாங்க இயலவில்லை. மேலும் அம்மொழிகளின் தேவையை ஆங்கிலத்தால் முழுமையாக பூர்த்தி செய்ய முடிந்தது. ஆனால் நம் தமிழ் மொழியானது தன்னை காலத்திற்கு ஏற்ப நன்றாக மாற்றிக் கொண்டே வருகிறது. உதாரணமாக,   கம்பர் பேசிய தமிழை பாரதியார் பேசவில்லை பாரதியார் பேசிய தமிழை நாம் இப்போது பேசுவதில்லை அதேபோல் நாம் இப்போது பேசும் தமிழை நம் வருங்கால சந்ததிகள் பேசப்போவதில்லை. ஆனால் இந்த கால மாற்றத்தில் தமிழ் தன்னைத் தானே மாற்றிக் கொண்டதே தவிர தன்னை மற்றொரு மொழியாகவோ அல்லது மற்றொரு மொழியிலிருந்து தன்னையோ மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் தான் தமிழ் மொழி இன்னும் இளமை மாறாத மொழியாக இருக்கிறது. 


2) இறந்த மொழி

               
              பொதுவாக ஒரு மொழி இறந்த நிலையில் இருந்து இல்லாதொழியும் நிலைக்கு மாறுவது, அம் மொழி இன்னொரு மொழியால் நேரடியாக பதிலிடப்படும்போது நிகழ்கிறது. எடுத்துக் காட்டாக, கொப்டிய மொழி அரபி மொழியாலும், பல தாயக அமெரிக்க மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துக்கியம் , எசுப்பானியம் ஆகிய மொழிகளாலும் பதிலீடு செய்யப்பட்டன. ஒரு மொழி இன்னொரு புதிய மொழியாகவோ அல்லது ஒரு மொழிக் குடும்பமாகவோ மாறுவதனாலும் மொழி வழக்காறழியக் கூடும். பழைய ஆங்கிலம் அழிந்து போனதை இதற்கு எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம்.இறந்த மொழிகள், பேசுவாரின்றிப் போனாலும் கூட, அறிவியல், சட்டம், சமயம் போன்றவை தொடர்பான தேவைகளுக்குப் பயன்படக்கூடும். சமசுக்கிருதம் , சிலாவோனிம்,  அவெசுத்தான், கொப்டியம், பழம் திபேத்திய மொழி, இலத்தீன் போன்றவை புனித மொழிகளாகக் கருதப்பட்டுவரும் இறந்த மொழிகளுள் சிலவாகும். இன்னொரு வகையில் சொல்வதானால், ஒரு மொழி பழங்காலத்தில் மக்களால் பேசப்பட்டிருந்தும், இன்று அதனை மீட்டுருவாக்கம் செய்து, அதில் எழுதுதல், மொழிபெயர்த்தல் போன்றவற்றைச் செய்ய முடியாத நிலை இருக்குமானால் அது வழக்காறொழிந்த மொழியாகும். மாறாக, தற்காலத்தில் பேசுவோர் இல்லாத போதிலும், எழுதுதல், வாசித்தல், மொழிபெயர்த்தல் போன்ற செயல்களைச் செய்யக்கூடிய அளவுக்கு அறியப்பட்டிருக்கும் மொழிகள் இறந்த மொழிகள் எனப்படுகின்றது.

தமிழ் மொழி மற்றும் இளைய சமுதாயம்:

           
                 இன்றைய இளைய தலைமுறையினர்  மீது இருந்த ஒரு மிகப் பெரிய குற்றச்சாட்டு அவர்கள் இந்த சமுதாயத்தின் மீது அக்கறை இல்லாமல் சமூக வலைதளங்களில் மூழ்கி உள்ளனர் என்று. ஆனால் தமிழகத்தை உழுக்கிய  கடந்த சில  நிகழ்வுகளில் எந்த தலைமுறையை இந்தச் சமூகம் குறைக் கூறியதோ அதே இளைய தலைமுறையும் அந்த சமூக வலைதளங்களும் தத்தளித்த இந்த தமிழகத்தை காப்பாற்றினார். மேலும் ஆங்கில மோகம் மேலை நாட்டு கலாச்சாரம் என விரும்பி வந்த இளைய தலைமுறையினர் நம் தமிழ் பாரம்பரியத்திற்கு ஒரு பாதிப்பு என்ற நிலை வந்த போது அனைத்து இளைய சமுதாயமும் கலத்தில் இறங்கி போராடியது மட்டுமல்லாது உலகமே திரும்பி பார்க்கும் படி  அறவழியில் போராடிக்காட்டியது. 
                                    ஆங்கிலத்தில் பேசினால் தான் மரியாதை தமிழில் பேசுவது அவமானம் என்ற எண்ணம்  சென்ற தலைமுறையில் பெரும்பாலானவர்கிடம் இருந்தது அதிலிருந்து முற்றிலும் விலகி தம்முடைய தாய் மொழியின் பெருமைகளை அறிந்து அம்மொழியில் பேசுவதும் தமிழனாக பிறந்ததும் தங்களுக்கு கிடைத்த பெருமை என கருதுகிறார்கள். மேலும் தமிழர்களின் பெருமையையும் கலாச்சாரத்தையும் பரப்புகின்றனர்.


தமிழின் பரிணாம வளர்ச்சி:

             
                 காலத்திற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு புதிய பரிமாணம் பெற்று மிளிர்வது நம் தமிழ் மொழி.                        

        " பழையன கழிதலும் புதியன புகுதலும்                       வழுவல கால வகையினானே!!!"                
  என்ற கூற்றுக்கு ஏற்ப தமிழில் புதிய மொழி நடைகளும் , பேச்சு வழக்குகளும் தோன்றியுள்ளன. இருப்பினும் நம் தமிழ் மொழி தன் தூயத் தன்மையை தொடர்ந்து பாதுகாத்துக் கொண்டுள்ளது. இது வேறு எந்த மொழிகளின் சாயலையும் தன்னுள் சேர்த்துக் கொள்ளளாமல் தனித்து சிறந்து விளங்குகிறது. 
                                நம் தமிழ் மொழியின் வளர்ச்சி மிகவும் வேகமானதாகவும் சிறப்பானதாகவும் உள்ளது. உதாரணமாக, ஒரு இரண்டு தலைமுறைகளுக்கு  முன்பு இருந்த நம் தமிழ் மொழியின் எழுத்துருக்களும் இப்போது இருக்கும் தமிழின்  எழுத்துருக்களும் பரிணமித்துள்ளன என்பது அனைவரும் நன்கு அறிந்த உண்மை. 



         அத்துடன் சென்ற தலைமுறையில் இருந்த மேடைப் பேச்சு வழக்குகளும் இந்த இளைய தலைமுறையில் இருக்கும் வானொலி தொகுப்பாளர்கள் கையாலும் வழக்குகளும் நன்கு பரிணமித்துள்ளன.            
                                 பாரதியாருக்கு முந்தைய கவிஞர்கள் கையாண்ட கவிதை நடைகளும் (மரபுக் கவிதை)   பாரதியார் கையாண்ட கவிதை நடைகளும்( புதுக் கவிதை)   இப்போது உள்ள இளைய தலைமுறையினர் கையாளும் கவிதை நடையும் (துளிப்பா அல்லது குறுங்கவிதை)  நன்கு பரிணமித்துள்ளன. 
இவை தமிழ் இன்னும் தழைத்து விளக்குவதற்கு சிறந்த பண்பாக உள்ளன. 


முடிவுரை:

          தமிழானது இன்னும் எத்தனை காலங்கள் ஆயினும் அது தன்னை புதிய பரிணாமத்திற்க்கு மாற்றிக் கொள்ளுமே தவிர தமிழ் ஒரு போதும் அழிந்து போகாது இன்றைய இளைய தலைமுறை அதனை அழிந்து போகவும் விடாது. மாற்றத்தை தாங்கிக் கொள்ளும் கல் கடவுள் ஆவதும் மாற்றத்தை தாங்க இயலாத கல் படிகட்டுகள் ஆவதும் நாம் அறிந்த நடைமுறையே!!! நம் தமிழ் மொழியானது கடவுளுக்கு இணையாகும்.
          
        தமிழனாய் பிறப்பதற்க்கும் இருப்பதற்க்கும்
                            பெருமைப்படுவோம்!!!
                         
                                         வீழாது தமிழ்!!!




Comments

  1. really good thoughts bro!!!. nice article

    ReplyDelete

Post a Comment

Popular Post's

கனாக் கண்டேன் 4

கனாக் கண்டேன்

இரவில் ஒரு பயணம்